பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற தசரா விழா மைசூரு மாநகரில் நாளை கோலாகலமாக தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 9.45 மணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, சாமுண்டேஸ்வரி தேவிக்கு பூஜை செய்து இதை தொடங்கி வைக்கிறார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை இதில் பங்கேற்கின்றனர். விழா முடியும் அக்டோபர் 3ம் தேதி வரை, தினமும் காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகளும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பன்னி மண்டபம், வாணிவிலாஸ் மாளிகை, அரண்மனை வளாகம், டவுன்ஹால் ஆகிய இடங்களில் கலை, நாட்டுப்புறக்கலை, நடனம், நாடகம், சங்கீதம், பக்தி இசை, இன்னிசை, கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அக். 5ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க யானை ஊர்வலம் எனப்படும் ஜம்போ சவாரி நடக்கிறது. தசராவை முன்னிட்டு மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கே.ஆர்.எஸ். உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.