தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதை தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், தமிழக அரசு நீதிக்கு புறம்பாக பாஜகவினருக்கு எதிராக காவல் துறையினரை பயன்படுத்தி வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
அதில், பாஜக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட 19 தாக்குதல் சம்பவங்களை பட்டியலிட்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை என்றும், தமிழக அரசு நீதிக்கு புறம்பாக பாஜகவினருக்கு எதிராக காவல் துறையினரை பயன்படுத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதன் மூலம், திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க, தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, பல முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.