ஸ்டாக்ஹோம்: நாம் எத்தனையோ போட்டோக்களை பார்த்திருப்போம். ஆனால் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒருவர் எடுத்துள்ள போட்டோ, வேற லெவலாக இணையத்தை கலக்கி வருகிறது.
உண்மையில் இந்த போட்டோக்களை எடுக்க அவர் உயிரை பணயம் வைத்திருக்க வேண்டும். இது போன்ற போட்டோக்கள் இதற்கு முன்னர் வேறு யாரேனும் எடுத்திருக்கிறார்களா என்று கூட நமக்கு தெரியாது.
தற்போது இந்த போட்டோக்கள், நீருக்கடியில் எடுக்கப்படும் சிறந்த போட்டோக்களுக்கான ‘ஸ்கூபா டைவிங் 2022’ எனும் விருதை வென்றிருக்கிறது.
அரிதானது
சரி அவர் அப்படி என்னதான் எடுத்தார் என்று கேட்கிறீர்களா? அவர் எடுத்தது திமிங்கலங்களின் சுடுகாட்டைதான். சரி இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இதில் நிறைய ஆர்சர்யமான விஷயங்கள் உண்டு. முதலில் நீங்கள் அவ்வளவு எளிதாக திமிங்கலங்களின் எலும்புகூடுகளை பார்த்துவிட முடியாது. நீர்மூழ்கி கப்பல்களில் பயணம் செய்தால் மட்டுமே இதனை நீங்கள் பார்க்க முடியும். அவ்வளவு அரிதானது இது.
பாராட்டத்தக்கது
மற்றொன்று இதனை கண்டு பிடிப்பது. ஏனெனில் உயிரிழக்கும் பெரும்பாலான திமிங்கலங்கள் கடற்கரையில் ஒதுங்கிவிடும். அல்லது வேறு மீன்களால் வேட்டையாடப்பட்டுவிடும். பொதுவாக திமிங்கலங்களின் சுமார் 100-200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறன் கொண்டது. எனவே இது உயிரிழப்பது என்பதே அரிதானது. மற்றொருபுறம் உயிரிழந்த திமிங்கலத்தின் உடல்கள் முழுமையாக ஆழ்கடலில் கிடைப்பது அரிது. இவ்வாறு இருக்கையில் இந்த படங்கள் நிச்சயம் பாராட்டத்தக்கதுதான்.
காரணம்
ஒவ்வொரு திமிங்கலத்தின் மரணமும் கடல்வாழ் உயிரினங்களுக்கு விருந்து என சொல்லப்படுகிறது. திமிங்கலம் மரணமடையும் போது விதிவிலக்காக ஆழ்கடலில் அதன் உடல் சென்றுவிடுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஏராளமான உயிரினங்களுக்கு விருந்து அமைந்துவிடுகிறது. அதாவது உடலின் சதை பகுதிகளை உண்பதற்காக பெரிய சுறாக்கள், மீன்கள் இந்த இடத்தை நோக்கி வரும். இதை ‘மொபைல்-ஸ்கேவெஞ்சர் நிலை’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பயன்கள்
அடுத்ததாக, ‘செறிவூட்டல்-சந்தர்ப்பவாத நிலை’. மீதமுள்ள உடலின் பாகங்களை சிறு சிறு நண்டுகள், மீன்கள், பூச்சிகள் ஆகியவை சாப்பிடுகின்றன. மூன்றாவதாக ‘சுயநிறைவு நிலை’ என அழைக்கப்படுகிறது. இந்த நிலையானது மிக நீண்ட நாட்களை கொண்டது. திமிங்கலத்தின் எலும்புகளில் சிக்கியுள்ள கொழுப்பை பாக்டீரியாக்கள் உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவ்வாறு சாப்பிடும்போது பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைடை உருவாக்குகிறது. இது நுண்ணுயிர் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது.
சிறப்பான படங்கள்
இவ்வளவு அற்புதமான விஷயங்களை படம் பிடிப்பது என்பது ஆச்சரியமான ஒன்றுதானே? இந்த படங்களை எடுப்பதற்கு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டாசன் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிக்கள் நிரம்பிய தாசிலாக் விரிகுடாவின் ஆழ்கடலில் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் அவர் சுமார் 20 திமிங்கலங்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளார்.