கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆரியதான் முகமது இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் கால்பதித்த ஆரியதான் முகமது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். தொடர்ந்து, கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தார். கேரளாவின் 10-வது சட்டசபையின்போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தார்.
1998 முதல் 2001-ம் ஆண்டு வரை கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் இருந்தார். ஈ.கே.நாயனார் ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், ஏ.கே.அந்தோணியின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் மின்துறை அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆரியதான் முகமது, சிகிச்சை பலனின்றி இன்று (செப்.25-ம் தேதி) காலை காலமானார். அவருடைய மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் தொகுதி மக்களால் எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆரியதான் முகமது என்பது குறிப்பிடத்தக்கது.