அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் இறுதி T20 போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (25) நடைபெறுகிறது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது T20 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு சர்வதேச T20 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில் சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தினால், கிண்ணத்தை வெல்வதுடன் T20 ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.