சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

“மன் கீ பாத்” எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி, செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப பெயர் வைத்தால் சிறப்பானதாக இருக்கும், விலங்குகளை மனிதர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் கருத்துகளை தெரிவிக்கலாம்.

உடல் மற்றும் மன நலனுக்கு யோகா உகந்ததாக உள்ளதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. காசநோய் இல்லாத தேசமாக 2025க்குள் இந்தியா மாறும். உள்ளூர் தொழிலுக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் இந்தியா பல உயரங்களை எட்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அவர்களின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், உடல்தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பலரும் உழைக்கின்றனர்.

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவின் பயணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாற்றாக, சணல், பருத்தி, வாழை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம். பருவ நிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நமது கடலோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கவலையளிக்கின்றன. இது போன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.