அதிகார மையத்தால் ஆட்டிவைக்கப்படும் அதிகாரிகள், அதனால் பாதிக்கப்படும் சாமனியர்கள் பற்றிய கதை தான் `ஆதார்’
பச்சைமுத்து (கருணாஸ்) ஒரு கட்டிட்டத் தொழிலாளி. அவரது மனைவி துளசியை (ரித்விகா) பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, செலவுக்காக சம்பளப் பணத்தைப் பெற மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார். வேலையை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்து பார்க்கும் போது மனைவியைக் காணவில்லை. துணைக்கு விட்டுச் சென்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பிறந்த குழந்தை கருணாஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கைக்குழந்தையுடன் காவல் நிலையம் செல்கிறார். காவல்துறை விசாரணையை நடத்துகிறது. கருணாஸின் மனைவிக்கு என்ன ஆனது எனக் கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக் கதை.
வழக்கமான ஒரு க்ரைம் இன்வஸ்டிகேஷனாக துவங்கும் கதை, பின்பு அதிகார மையத்தின் கோர முகத்தை மெல்ல மெல்ல காட்டத் துவங்குகிறது. அதை முடிந்த அளவு இயல்பாக காட்சிப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார். சாமனிய மனிதர்களுக்கு எதிராக பணபலம் படைத்தவர்களும், அதிகாரிகளும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என இந்தப் படம் பேசும் விஷயம் மிக முக்கியமானது.
முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், ஒரு இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பயந்து பயந்து காவல்துறையை நெருங்குவது, மனைவிக்கு என்ன நடந்தது எனக் குழும்புவது, குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வது எனத் தடுமாறுவது இப்படி சில இடங்களில் நிறைவான நடிப்பைக் கொடுக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் இயல்பான நடிப்பால் நம்மை கவனிக்க வைக்கிறார் ரித்விகா. அருண் பாண்டியனின் நடிப்பு பல இடங்களில் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்ற வகையிலேயே இருந்தது. இனியா, பாகுபலி பிரபாகர், உமா ரியாஸ்கான், தேனப்பன், திலீபன் எனப் பலர் இருந்தாலும் யாரும் கவனிக்க வைக்கும்படியான நடிப்பைக் கொடுக்கவில்லை.
படத்தில் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் தான், அதை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை. ஆனால் பின்னணி இசை மூலம் படத்தின் எமோஷனல் காட்சிகளை சிறப்பாக்குகிறார்.
படம் பேசும் கருத்து மிக முக்கியமானது. ஆனால் மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் படம் பார்க்கும் போது எழுகிறது. காட்சி அமைப்புகள், சில முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு, திரைக்கதை என எல்லாம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் கோ இன்சிடெண்டாக இருப்பது நம்பும்படியாக இல்லை. உதாரணமாக, கருணாஸ் எதேர்ச்சையாக ஒரு வீட்டு கதவைத் தட்ட, ஏற்கெனவே கருணாஸ் மீது முன் பகையில் இருக்கும் ஒருவர் வெளியே வருவது, மருத்துவமனை செல்லும் அருண் பாண்டியன், அங்கே எதேர்ச்சையாக ஒரு நபரைப் பார்ப்பது, கதவைத் திறந்து வெளியே குதிக்கும் இனியாவுக்கு நடக்கும் சம்பவம் எனப் படத்தில் எக்கச் செக்கமான கன்வீனியட் ரைட்டிங்.
படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தின் குற்றவுணர்ச்சி கடைசி வரை பார்வையாளர்களுக்கு கடத்தப்படவே இல்லை. எனவே அந்தப் பாத்திரம் இறந்து போகும் போதும் அது எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அந்த பாத்திரத்தில் நடித்தவரும், அந்தக் காட்சிகளுக்கான ரைட்டிங் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால், படத்தின் மிக சிறப்பான ஹைலைட்டாக அந்த கதாபாத்திரம் இருந்திருக்கும்.
படத்தின் சுமாரான மேக்கிங், மற்றும் சில நடிகர்களின் நடிப்பு, மேலோட்டமான எழுத்து போன்ற குறைகள் இருந்தாலும், இது முக்கியமான சினிமா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்று உண்மையை எந்த சமரசமும் இன்றி சொன்ன விதத்தில், பாராட்டப்பட வேண்டிய படமாக மாறுகிறது ‘ஆதார்’.
– ஜான்சன்