தமிழ்நாட்டின் உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பவர் க.பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். அரசியல், வரலாறு, பொதுத்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். ”இனமான இளைய பேராசிரியர்” என்று உடன்பிறப்புகளால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.
அதில், ”உங்க குடும்ப கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா? இல்லையா? வாங்குனீங்களா? வாயை திறங்க… 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா… இப்ப பஸ்ஸுல எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போனும்னாலும், வேற எங்க போனும்னாலும் ஓசி, ஓசி. ஓசி பஸ்ஸுல போறீங்க” என்று கூறியுள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட, மதிப்பிற்குரிய மற்றும் பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் இப்படி பேசலாமா?
இலவசம் என்பது இனாம் கிடையாது. அது வளர்ச்சிக்கான வித்து. சமூக நீதியின் ஓர் அங்கம். ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தை கைதூக்கி விட்டு ஒரே தட்டில் வைத்து பார்ப்பதற்கான அடிப்படை என்றெல்லாம் திமுக ஆட்சியில் திராவிட மாடல் அரசில் விளக்கம் அளிக்கப்பட்டு வரும் சூழலில் பொன்முடியின் பேச்சு தமிழக மக்களை கலங்க வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றனர்.
ஓசி என்ற ஒற்றை வார்த்தையால் அவர் பேச வந்த கருத்தே மாறிவிட்டது. இது அவருக்கு மட்டுமின்றி, அவரது கட்சிக்கும் அவப்பெயர் ஆகியுள்ளது. இவ்வாறு பேசுவதை வருங்காலத்தில் அமைச்சர் பொன்முடி திருத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் ஒருபடி மேலே போய் அதிமுகவிற்கு சி.வி.சண்முகம் போல திமுக க.பொன்முடி இருக்கிறார் எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மறுபுறம் அமைச்சர் பொன்முடி பேசியதை வெட்டி ஒட்டாத முழுக் காணொலியையும் பார்த்து விட்டோம். அவர் மீது இவ்வளவு வசைமொழிகள் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதை தாண்டிய பெண்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் அந்தப் பகுதி வட்டார மொழி நடையில் அவர்களுக்கு புரியும் வகையில் இயல்பாக சிரித்த தொனியில் தான் பேசியிருக்கிறார்.
அதுவே திமிரான தொனியில் பேசியிருந்தால் கண்டிக்கலாம் என்று திமுக உடன்பிறப்புகள் சிலர் முட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். எப்படியும் இந்த வீடியோவை வைத்துக் கொண்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காரசாரமாக பொரிந்து தள்ள தயாராகி கொண்டிருப்பர். விரைவில் விமர்சனக் கருத்துகளை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.