தமிழகத்தில் 3.40 கோடி பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள் உள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் 38-வது மெகா தடுப்பூசி முகாமை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 90 லட்சமாவது பயனாளியைச் சந்தித்து அவருக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

அதன்பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” மத்திய அரசின் அறிவிப்பின்படி பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.386.25 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டுக்கொண்டிருந்த நிலையில், அண்மையில் பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே தொடர்ந்து வாரந்தோறும் இந்த தடுப்பூசி மெகா முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செப்.30 வரை இலவசமாக செலுத்திக்கொள்வதற்கு கால நிர்ணயம் முடிவடைகிறது. செப்.30க்குப் பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்வது தொடருமா? அல்லது ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் கட்டி செலுத்திக்கொண்ட நிலை வருமா? எனத் தெரியவில்லை.

இரண்டொரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்திக்கொள்வதற்கு 4 முதல் 5 நாட்கள் வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். நாளை முதல் முதல் செப்.30 வரை சுகாதார துறையின் 11,333 மருத்துவக் கட்டமைப்புகளிலும் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும்.

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 926 பேர். இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 86 லட்சத்து 31 ஆயிரத்து 976 பேர். இன்னும் 3 கோடியே 40 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்யடிவர்கள்.

எனவே நாங்கள் விடுக்கிற வேண்டுகோள் என்பது, மத்திய அரசின் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுக்கி விழுகிற இடங்களில் எல்லாம் தடுப்பூசி முகாம்கள் என்கிற வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுகிற பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.