கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது மேற்கு வங்காளத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தை அனல் பறக்க வைக்கின்றனர்.
6 மாதங்களில்
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை காட்டி எதிர்க்கட்சிகளை அசைத்து பார்க்க பாஜக முயற்சிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்படி மேற்கு வங்காள அரசியல் களம் கொதித்து கொண்டிருக்கும் நிலையில், ”அடுத்த ஆறு மாதங்களில் புதிய உத்வேகத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும்” என்ற வாசகங்களுடன் பல இடங்களில் அக்கட்சியினர் நோட்டீஸ்களை ஒட்டி இருந்தனர்.
டிசம்பர் தான் இறுதிக்கெடு
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்காள எதிர்க்கட்சி தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி, ”அமலாக்கத்துறையும் சிபிஐ அமைப்பும் தங்கள் பணிகளை செய்து வருகின்றன. அடுத்த ஆறு மாதங்கள் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்காது. டிசம்பர் மாதம் தான் இதற்கு இறுதிக்கெடு” என்று கூறியிருந்தார்.
21 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர்
இந்த நிலையில், மேற்கு வங்காள பாஜக தலைவர்களில் ஒருவரும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் அன்று சொன்ன அதே கருத்தை தான் இன்றும் வலியுறுத்துகிறேன். கொஞ்ச காலம் காத்திருங்கள்.. நடப்பது அனைத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள். 21 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவில் சேர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.
முதல் முறையாக
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக திகழ்ந்த மிதுன் சக்கரவர்த்தி, பாஜக 77 இடங்களில் மட்டுமே பெற்று ஆட்சியை பிடிக்க தவறியதால் அதிகம் பொது வெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். தற்போது பல மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக மிதுன் சக்கரவர்த்தி தாக்கி பேசியிருக்கிறார்.