நாடு முழுவதும் கடந்து மூன்று நாள்களுக்கு முன்பு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் நிர்வாகிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடல் பகுதியில் உள்ள தொழிலதிபர் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்யாணசுந்தரத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பெட்ரோல் குண்டுகள் வீசும் காட்சிகள் பதிவாகின.
ஹெல்மட் அணிந்தபடி பைக்கில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் கல்யாணசுந்தரத்தின் வீட்டு கேட்டுக்கு அருகே சென்று பெட்ரோல் குண்டுகளை பற்றவைத்து வீட்டை நோக்கி தூக்கியெறிந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. பெட்ரோல் குண்டு வீச்சில் கல்யாணசுந்தரத்தின் வீட்டின் ஜன்னலும், வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரும் லேசாக சேதமடைந்தன. தகவலின்பேரில் அங்கு சென்ற மண்டைக்காடு போலீஸார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்யாணசுந்தரம் முன்பு பா.ஜ.க-வில் உறுப்பினராக இருந்ததாகவும், பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கருமன்கூடல் பகுதியில் வேறு பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளும் உள்ள நிலையில் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.