திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதிவை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த செப். 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 2009க்கு பிறகு தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்ததாகவும், ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஸ்டாலின் முதலமைச்சராகி பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இது தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் கூறியிருந்தார். எனவே, அந்த மனநிறைவுடன், நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, கட்சிப் பதவியை ராஜினாமா செய்து, தனது விலகல் கடிதத்தையும் கடந்த ஆக. 29ஆம் தேதி அன்றே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
‘அனைத்தும் பொய்’
அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அதனாலே அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன. அந்த வகையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் இன்று மாலை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தனது அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சியிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,”எம்ஜிஆர் காலத்திலேயே, அவரது செயல்பாடுகள் பிடிக்கவில்லை என அதிமுகவில் விலகியவள், நான். தற்போது, போயும் போயும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் சேருவேன்” என்றார்.
‘திக-விற்கு மட்டும்தான் தகுதியிருக்கிறது’
மேலும், நான் சேர்வதற்கு திராவிடர் கழகத்தை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சிக்கும் அந்த தகுதியில்லை என கூறினார். இருப்பினும், அரசியலில் இருந்து ஓய்வு பெறவே திமுகவில் இருந்து விலகியதாகவும், வேறு கட்சியில் இணையும் எண்ணம் துளியும் இல்லை என உறுதியாக கூறினார். 2004-2009 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு மாவட்ட மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜகவின் சி.கே. சரஸ்வதியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.