திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடந்த ஆணவ படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையை அடுத்த வெள்ளலூரில் “குமுகழ அழககம்” என்ற பெயரில் குடும்ப அழகு நிலையம் ஒன்றைத் திறந்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை “பூ” பார்வதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை பார்வதி, “கௌசல்யா மற்றும் அவரைப் போன்ற பெண்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன், காதலிப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையை வாழ்வதற்கும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. பெண்களின் உரிமையைச் சிலர் திருட பார்க்கிறார்கள். அதையும் தாண்டி அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்த கௌசல்யா, நிஜ வாழ்க்கை ஹீரோவாக திகழ்கிறார். அவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு நான் துணை நிற்பேன். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வெளிவரும் படங்கள் வரவேற்கத்தக்கன.மரியான் திரைப்படத்திற்குப் பிறகு ஏன் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, காதல் சார்ந்த திரைக்கதைகள் மட்டுமே எனக்கு தமிழில் வந்தது. அவை மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும், அதனால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றார்.
அரசுப் பணியை ராஜினாமா செய்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கெளசல்யா, “நான் முழுநேரமும் சமூகம் சார்ந்த சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் இந்தத் துறைக்கு வந்துள்ளேன், அதற்கு அரசு வேலை தடையாக இருந்ததால் ராஜினாமா செய்துவிட்டேன். என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் அனைத்து பெண்களும் சுயமாகத் தொழில் தொடங்க என்னால் முயன்றதைச் செய்வேன். நடிகை பார்வதி ஒரு சாதி மறுப்பு எண்ணம் கொண்ட நபர். பெண்களை முன்னிறுத்தும் வகையில் பல திரைப்படங்களையும் கொடுத்துள்ளார், அதனால் இந்நிகழ்ச்சிக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளேன்.” என்றார்.