கோடிகள் வந்தது நிம்மதி போச்சு… தலைமறைவு வாழ்க்கை வாழும் ஆட்டோ டிரைவர் அனூப்!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு அரசாங்கமே லாட்டரி விற்பனை செய்து வருகிறது.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்தை முன்னிட்டு, கடந்த 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில், திருவனந்தபுரம் ஸ்ரீவரஹம் பகுதியை சோ்ந்த அனூப் என்பவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஆட்டோ ஓட்டுநரான இவா், கடன் பிரச்சனை காரணமாக மலேசியாவுக்கு சமையல் வேலைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், லாட்டரில் 25 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அறிந்து, திக்குமுக்காடி போய்தான் இருந்தார் மனுஷன். தன் மகன் உண்டியல் சேமிப்பில் இருந்து கொடுத்த பணத்தில் 500 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரியில் தமக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அனூப் மற்றும் அவரது குடும்பத்தினர், பொதுமக்களின் வாழ்த்து மழையிலும் நனைந்தனர்.

25 கோடி ரூபாய் முதல் பரிசில் வரி பிடித்தம் போக, 15.75 கோடி ரூபாய் கிடைக்கும் என்று தகவல் கிடைக்கவே, உடனே பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார் அனூப். பணம் கைக்கு வந்ததும், அதனை வைத்து வீடு கட்டுவேன்; ஏழைகளுக்கு உதவுவேன் என்றெல்லாம் உற்சாகமாக பேட்டி அளித்தார் அவர்.

ஆனா்ல் அதன் பிறகுதான் அவருக்கு வினையே ஆரம்பித்தது. அவரை தேடி பலர் வீட்டுக்கு வர தொடங்கினர். மருத்துவ செலவுக்கு பயணம் தாருங்க;வீடு கட்ட பணம் தாங்கன்னு உறவினர் நச்சரிக்க ஆரம்பித்தனர். தொண்டு நிறுவனங்கள் பலவும் அனூப்பை நாடி வந்து பணம் கேட்டன. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், பணம் தராவிட்டால் நடக்குறதே வேற என்ற ரீதியில் அனூ்ப்புக்கு மிரட்டல் விடுக்க ஆரம்பித்தனர். வெளியே தலைக்காட்ட முடியாாத நிலை. கடுப்பான அனூப் வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியின் வீட்டில் தஞ்சம் அடைந்த அவர். அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.

‘லாட்டரியில் முதல் பரிசு விழுந்த போது முதலில் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு எனக்கு ஏற்பட்டுள்ள அன்பு தொல்லைகளாலும், விடுக்கப்படும் மிரட்டல்களாலும் அந்த மிகழ்ச்சியே போய்விட்டது. பேசாமல் 3 அல்லது 4 ஆவது பரிசு விழுந்திருந்தால் இவ்வளவு இம்சை ஏற்படாமல் இருந்திருக்குமோ என்று எண்ணும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

என் பிள்ளைகளுக்கு உடல்நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறேன். வெளியே சுதந்திரமாக தலைகாட்ட முடியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா?என்று என்னை நானே நொந்து கொள்ளும் நிலைக்கு ஆளாகி உள்ளேன். தற்போதைக்கு எனக்கு கிடைத்துள்ள பரிசுத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளேன்’ என்று தான் வெளியிட்ட வீடியோவில் மனம் நொந்து கூறியுள்ளார் அனூப்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.