திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா, 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர ஆளுநராகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா, அதன் பின்னர் பாஜக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.