நீர் நிலைகளை காப்பதில் நெல்லை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது: அப்பாவு

ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பதில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிற்கே நெல்லை மாவட்டம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நெல்லை நீர்வள சங்கம் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். உலக ஆறுகள் தினம் கொண்டாடுவதை முன்னிட்டு நெல்லை நீர்வளம் அமைப்பு சார்பில் நெல்லை நீர்வள சங்கமம் என்ற கருத்தரங்கம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது . இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சிகளின் நீர் நிலைகளின் வரைபடத்தை வெளியிட்டார். தொடர்ந்து நெல்லை நீர்வள தொகுப்பும் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு விழாவில் பேசுகையில் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் மனித சமுதாயத்திற்கு தண்ணீர் மிக முக்கியமான ஒன்றாகும் . இதனை கருத்தில் கொண்டு கனடா நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏஞ்சலோ என்பவர் 2005- ம் ஆண்டு நீர் நிலைகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் செப்டம்பர் 25 – ந்தேதி உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது . உலக அளவில் சிந்து நதி, அமேசான் ஆகியவை மிக நீளமான ஆறுகள் பட்டியலில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கங்கை ஆறு மிகப்பெரிய ஆறாகும். தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி நதி பாய்ந்து ஓடுகிறது ஆறுகளை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆறுகளின் இரண்டு கரைகளின் எல்லையும் முதலில் கண்டறிந்து அதுவரை சுத்தம் செய்யவேண்டும் என்பது மிக முக்கியமாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 42 அணைகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 9 அணைகள் நெல்லை மாவட்டத்தில் உள்ளது, நமது முதல்வரும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் 33 சதவீதம் காடுகளை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சம் மரங்களும், அடுத்த ஆண்டு 14 லட்சம் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நீர்வளம் என்று அமைப்பு தொடங்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள 1200க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் தாமிரபரணி ஆறு ஆகியவை சீர்படுத்தப்பட்டு வருகிறது நீர் நிலைகளை பாதுகாப்பதில் தமிழக மட்டுமல்லாத இந்தியாவிற்கே நெல்லை மாவட்டம் எடுத்துக்காட்டாக உள்ளது.

மேலும் பாபநாசம் முதல் நெல்லை வரை தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் இன்னும் 18 மாதங்களில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் குடிக்க உகந்த தண்ணீராக மாறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். நீர் நிலைகளை பாதுகாப்பது என்ற பணியை விட்டு விடாமல் தொடர்ந்து நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிசப், ஐ.ஐ.டி பேராசிரியர் வெங்கட்ராமன் மற்றும் தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.