காதலுக்கு ஓகே… கல்யாணத்துக்கும் ஓகே, முத்தம், கட்டிப்பிடித்தலுக்கும் கூட சம்மதம்… ஆனால், தாம்பத்திய உறவுக்கு மட்டும் ஏனோ விருப்பமில்லை. சில தம்பதிகள் மத்தியில், இப்படியும் ஒரு பிரச்னை இருந்து கொண்டிருக்கிறது. நம்முடைய வாசகர் ஒருவரும் இதே பிரச்னையால் தவித்துக் கொண்டிருக்கிறார்.
`திருமணமாகி 7 மாசங்களாயிடுச்சு. இன்னமும் தாம்பத்திய உறவு நிகழலை. பெற்றோர் பார்த்து வெச்ச திருமணம்னாலும், ரெண்டு பேரும் பிடிச்சுதான் திருமணம் செஞ்சுக்கிட்டோம். ஆனா, ஆசையா கிட்ட போனாலே பயப்படுறா. சில நேரங்கள்ல வயித்துவலி, பீரிய்ட்ஸ்னு காரணம் சொல்லி விலகுறா. தாம்பத்திய உறவுக்குப் பயப்படுறான்னு நினைச்சேன். நாமதான் முழு முயற்சி எடுக்கணும்னு ஒரு நாள் சீரியஸா நெருங்கினேன். பளார்னு கன்னத்துல அடிச்சிட்டா. எனக்கு மனசே உடைஞ்சு போச்சு. என் மனைவிக்கு என்ன பிரச்னை; இதை சரி செய்ய முடியுமா?’ – வாசகரின் இந்தக் கேள்விக்கு மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி பதில் சொல்கிறார்.
“தாம்பத்திய உறவில் இவருடைய பிரச்னை புதிது கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக நான் இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். 1972 – ம் வருடம். தமிழ்நாட்டில் செக்ஸாலஜிஸ்ட் கேம்ப் ஒன்று நடந்தது. நாகரிகமான ஓர் இளம் ஜோடி கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தனர். அவர்களுக்குத் திருமணமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்தப் பெண்ணால் கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள இயலவில்லை. இத்தனைக்கும் அவர்களுடையது காதல் திருமணம். அவர்களிடம் பேசியதில், நாங்கள் கண்டுபிடித்த காரணம் என்ன தெரியுமா? அந்தப் பெண்ணின் பாட்டிக்கு, பேத்தியின் காதல் திருமணத்தில் விருப்பமில்லை.
`கல்யாணத்தை உன் விருப்பத்துக்கு செஞ்சுக்கிட்டே. ஆனா, முதலிரவுல எவ்ளோ வலியிருந்தாலும் கணவரோட சந்தோஷத்துக்காகப் பொறுத்துக்கோ. இங்க திரும்பி வந்திடாதே’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்?! முதலிரவை மகிழ்ச்சியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண், பயந்துபோய் விட்டார். விளைவு, தாம்பத்திய உறவின்போது பெண்ணுறுப்பு இறுகிவிட்டது. இதைப் புரிய வைத்த பிறகு, அத்தம்பதியரின் பிரச்னை சரியானது.
பொதுவாக மனைவிக்குத் தாம்பத்திய உறவு பிடிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிறு வயதில் அவர்களை யாராவது பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கலாம். சில பெண்களுக்கு கணவர் மீது விருப்பம் இருக்கும். ஆனால், தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் வலிக்குமோ என்ற பயத்தில் கணவரைத் தவிர்ப்பார்கள்.
முதலிரவின்போது வலிக்கும்; ரத்தம் வரும் என்று குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ சொல்லியிருந்தாலும் தாம்பத்திய உறவு கொள்ள பயப்படுவார்கள் பெண்கள். சினிமாக்களிலும் சீரியல்களிலும் காட்டப்படுகிற பிரசவ காட்சிகளில் பெண்கள் அலறுவதைப் பார்த்தாலே, இளம்பெண்களுக்குத் தாம்பத்திய உறவின் மீது பயம்தான் வரும். சில பெண்களுக்கு செக்ஸில் விருப்பமிருக்காது. இவர்களை ஏசெக்ஸுவல் என்போம்.
கணவருடைய பிறப்புறுப்பு, வாய், உடல் ஆகியவை சுத்தமாக இல்லையென்றாலும் பெண்கள் தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள். புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஜீரணமின்மை போன்ற காரணங்களால் சுவாசத்தில் துர்வாடை வீசினாலும் மனைவி உறவுக்கு விரும்ப மாட்டார். கணவருடைய மூக்கிலோ அல்லது பல் ஈறிலோ கிருமித்தொற்று ஏற்பட்டு துர்வாடை வந்தாலும், வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் உறவுக்கு மறுப்பார் மனைவி.
மேலே சொன்ன இத்தனை பிரச்னைகளில், இந்த வாசகரின் மனைவி என்ன பிரச்னை காரணமாக தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறார் என்பதை கிளினிகல் சைக்காலஜிஸ்ட் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும். அவர்கள், கேள்விகள் மூலமாக வாசகரின் மனைவி ஏன் தாம்பத்திய உறவைத் தவிர்க்கிறார் என்பதைக் கண்டறிவதோடு, அதற்கேற்ப தீர்வையும் வழங்குவார்கள்” என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.