தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கார் எரிப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழக முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த மத்திய சிறுகுறு தொழில்துறை இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பா.ஜ.க ஓ.பி.சி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பா.ஜ.க பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்கள்மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருவது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நடந்த என்.ஐ.ஏ சோதனை போல் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்தது. தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.