மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று 9,500 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சேதமடைந்த நடைபாதை மற்றும் தடுப்புகளை சீரமைத்த பின்னரே அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 11,072 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 9,050 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.33 அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.40 டிஎம்சியாக உள்ளது.