மதுரை: அதிமுக ஆட்சியிலேயே இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டடன என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அதற்கு அவர், “பொதுவாகவே எனக்கு பேட்டிக் கொடுக்கிற பழக்கம் இல்லை. ஏதாவது இரண்டு மூன்று கேள்விகள் கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன்” என்று சற்று கோபமாகவே பேட்டியை ஆரம்பித்தார்.
அதன்பின் செய்தியாளர்கள், “என் மீது ஊழல் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் விலகி விடுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறார், மின்சார கட்டணம், சொத்துவரியை உயர்த்திவிட்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டுகிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ”முதல்வர் எனக்கு நிதி, ஒய்வூதியம், மற்றும் ஒய்வூதிய பலன்கள், திட்டமிடுதல், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் மற்றும் மனித வள மேலாண்மை போன்ற துறைகளை வழங்கியுள்ளார். இதில், மனிதவள மேலாண்மை துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், ஊழல் தடுப்பு மற்றும் ஆய்வு செய்யும் சிறப்பு போலீஸ் பிரிவு என் துறையில் வருகிறது. அதற்கு நிதி ஒதுக்கி அதன் செயல்பாட்டை நானே கண்காணிக்கிறேன். அரசின் கைக்கு எட்டுகிற தூரத்திற்கு செயல்பட இந்த ஊழல் தடுப்புப் பிரிவு செயல்பட வேண்டும். இந்தப் பிரிவின் ஒரு பங்காக நான் செயல்படுவதால் எனக்கு சில தகவல்கள் தெரியலாம். அதை வெளிப்படையாக சொல்வது அரசிற்கு விரோதமானது.
பொதுவாக சொல்கிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு வழக்குகள் குவிந்துள்ளது. அந்த வழக்குகளை விசாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள், நிதி, பணியாளர்கள் எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால், அந்த பிரிவு போலீஸார் மிகவும் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். வரும் காலங்களில் அதோட விளைவு வெளிப்படையாக எல்லோருக்கும் விரைவில் தெரியும். சில முன்னாள் அமைச்சர்கள் பற்றி அமைச்சரவை விவாதத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசின் ரகசியம் என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை. இன்னும் நிறைய வழக்குகள் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அந்த துறையை சிறப்பித்து இருக்கிறோம். விளைவு வர வர எல்லோருக்கும் தெரியும். அதற்கு மேல் நான் பேசக்கூடாது.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், மின்கட்டணம், சொத்துவரியை உயர்த்திவிட்டு வருவாய் பற்றாக்குறை குறைந்ததாக நிதி அமைச்சர் கூறுகிறார் என்று குற்றம்சாட்டுகிறார். அவர் 10 ஆண்டுகளாக எப்படி அமைச்சராக இருந்தார். முதலில் இந்த ஆண்டு மின்கட்டணம், சொத்து வரியை அதிகரித்தால் எப்படி கடந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறையை குறைக்க முடியும். நான் கடந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறையை குறைத்ததாகதான் சொன்னேன். இந்த ஆண்டு உயர்த்திய வரியைக் கொண்டு கடந்த ஆண்டு கணக்கை எப்படி திருத்தம் செய்ய முடியும். இந்த அடிப்படையே தெரியாமல் இதை எப்படி அவர் மக்களுக்கு செய்தியாக சொல்கிறார்.
மேலும், மின்கட்டணம், மாநில வருமானத்திற்காக வருது. சொத்து வரி உயர்வு மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி நிறுவனங்களுக்கு செல்கிறது. சாமாணிய மக்களுக்கு கூட தெரிகிற இந்த கணக்கு, நிதி மேலாண்மை 10 ஆண்டு அமைச்சராக இருந்தவருக்கு எப்படி தெரியாமல்போனது. இலவச லேப்டாப், இரு சக்கர வாகன திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்திவிட்டார்கள் என்று சொல்கிறார். இவர்கள் ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகளாக லேப்டாப் கொடுக்கவில்லை. அவர்கள் திட்டத்தை அவர்களே நிறுத்திவிட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தை அவர்களே 4 ஆண்டுகளாக தங்கம், நிதியும் கொடுக்காமல் நிறுத்தி விட்டார்கள். உங்கள் திட்டத்தை நீங்களே செயல்படுத்தவில்லை.” என்று தெரிவித்தார்.