தமிழ்நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீடுகளில் தாக்குதல் – அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

annamalai bjp

@annamalai_k twitter

annamalai bjp

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள், வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தாக்குதல் செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 24) கே. அண்ணாமலை அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூழ்நிலை சரியாகும்வரை தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு நிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அமித் ஷாவின் அலுவலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சோதனைகளுக்கு பிறகு பி. எஃப்.ஐ அமைப்பினர் 11 பேர் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினர் மற்றும் உள்நோக்கத்துடன் செயல்படும் சில இஸ்லாமிய அமைப்புகளிடையே அமைதியின்மையை உண்டாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சொல்வது என்ன?

Sylendra babu ips

Sylendra babu ips facebook

Sylendra babu ips

சமீபத்திய தாக்குதல்களுக்கு பிறகு அந்தந்த காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு நேற்று அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து நேற்று மதியம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 100 பேரிடம் விசாரணை தொடர்வதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல்கள்

Tn police

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல்கள்

கோவை மாநகரில் ஆர்.ஏ. எஃப் (அதிவிரைவு அதிரடிப் படையினர்) இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படையினர் இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படையினர் இரண்டு பிரிவுகள் என அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி பி. தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல் வீசிய 19 பேரும், தஞ்சாவூரில் பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய அரித்திரி, சலீம், சிறாஜிதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனைகள்

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.

BBC

கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஎஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்த அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் பிறகு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது மற்றும் வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.

தமிழ்நாட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்திருந்த வேளையில் இந்த சம்பவங்கள் நடந்தன.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளியன்று (செப்டெம்பர் 23) தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் மற்றும் மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.