மதுரை: மதுரை காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் வீராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில், முன்னாள் எம்பி (பாஜக) சுப்பிரமணியசுவாமியின் 83 பிறந்த தினவிழா நேற்று நடந்தது. சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் மனோகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஆட்சியர் சந்திரலேகா வரவேற்றார்.
விழாவில் பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது…
“பகவத் கீதையில் சாதி சொல்லப்படவில்லை. வர்ணா (கலர்) என குறிப்பிடப்பட்டுள்ளது. சத்ரியர் கலர் பச்சை, பிராமணர் – வெள்ளை, வைசியர்கள் – மஞ்சள், சூத்திரர்களின் கலர் கருப்பு. கலரில் வித்தியாசம் எதுவுமில்லை.
கடந்த 1991-க்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் சில மருத்துவ உதவிகளை செய்தனர். அதைத் தொடர்ந்து எதிர்த்தேன். அப்போதையை திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தேன். அதன்பின், நடந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றனர். தமிழ், தமிழ் என கூறிக் கொண்டு தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர் தான் கருணாநிதி.
இந்த நாட்டை யாரும் பிரிக்க முடியாது. திராவிட கொள்கை கொண்டவர் பெரியார் என சொல்கிறார்கள். அவரது சொந்த ஊரான ஈரோட்டில் அவரது தந்தை கோயில் கட்டி அதில் பூசாரியாக இருந்தார். அவரது இறப்பிற்கு முன், எழுதிய உயிலில் மகன் கோயிலை நன்றாக நடத்துவார் என எழுதியிருந்தார். அக்கோயிலை 25 ஆண்டுகள் நிர்வாகம் செய்தார். இது பற்றி வீரமணியிடம் கேளுங்கள். அவர் மறுக்க முடியுமா.
கோயில் நிர்வாகம் நடத்த முடியும் என்றால் நாட்டை ஒற்றுமைப்படுத்தவும் முடியும். பெரியார் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். மூடநம்பிக்கை பற்றி பேசும் திமுக அரசு ஏன் கோயில்களை நிர்வகிக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள 22 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கோயில்களில் டிரஸ்டிகளை நீக்கிவிட்டு, அந்தந்த கோயில்களில் என்ன பூஜை நடக்க வேண்டும் என, பூசாரிகளே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்” என அவர் பேசினார்.