கோவை முதல் குமரி வரை… தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்!

சேலம்: ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு! – 7 பேர் கைது

சேலம், பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ராஜன் உடனடியாக போலீஸில் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். ராஜன் அளித்த தகவலின்பேரில் போலீஸார் ஏழு பேரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், காதர் உசேன், சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

சேலம்

கைதான இருவர்மீதும் தீ வைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மதநல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இருவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களை கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான வேலைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சேலம் மாநகரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின்மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் சையது அலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, இருவரையும் கைதுசெய்தோம். மேலும், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

திண்டுக்கல்: பாஜக நிர்வாகி ஷெட்டுக்கு தீ! – ஒருவர் கைது

திண்டுக்கல், குடைபாறைபட்டியைச் சேர்ந்தவர் செந்தில்பால்ராஜ். பா.ஜ.க கிழக்கு மாவட்ட மாநகர் மேற்கு மண்டலத் தலைவரான இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் குடைப்பாறைபட்டியில் அமைந்துள்ள இவருக்குச் சொந்தமான இடத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். அந்த வாகனங்களை கார் செட்டுடன் சேர்த்து மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பினர்.

வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த இந்தச் சம்பவத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமாகின. இது குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இதையடுத்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க-வினர் திண்டுக்கல்-வத்தலகுண்டு மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துவிட்டு இரண்டு மர்ம நபர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து தீவிர விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்ற இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக்கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டிருக்கிறார். 

கன்னியாகுமரி: தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! – போலீஸ் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடல் பகுதியில் உள்ள தொழிலதிபர் கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கல்யாணசுந்தரத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பெட்ரோல் குண்டுகள் வீசும் காட்சிகள் பதிவாகின. ஹெல்மட் அணிந்தபடி பைக்கில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர் கல்யாணசுந்தரத்தின் வீட்டு கேட்டுக்கு அருகே சென்று பெட்ரோல் குண்டுகளை பற்றவைத்து வீட்டை நோக்கி தூக்கியெறிந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. பெட்ரோல் குண்டு வீச்சில் கல்யாணசுந்தரத்தின் வீட்டின் ஜன்னலும், வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரும் லேசாக சேதமடைந்தன. தகவலின்பேரில் அங்கு சென்ற மண்டைக்காடு போலீஸார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசும் காட்சி

கல்யாணசுந்தரம் முன்பு பா.ஜ.க-வில் உறுப்பினராக இருந்ததாகவும், பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கருமன்கூடல் பகுதியில் வேறு பா.ஜ.க பிரமுகர்களின் வீடுகளும் உள்ள நிலையில் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை: ஆர்.எஸ்.எஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நேற்று இரவு மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனுப்பானடியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர். போலீஸார் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்: பாஜக ஆதரவாளர் வாகனங்களுக்கு தீ!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி நிலைய அலுவலரும், பா.ஜ.க-வின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துவரும் டாக்டர் மனோஜ் குமார் என்பவர் தன்னுடைய இரண்டு கார்களை தான் நடத்தி வரும் கிளினிக் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் மூன்று பேர் நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் ஊற்றி அவரது இரு கார்களுக்கும் தீ வைத்து எரித்தனர். தீ வைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் அடிப்படையில் ராமநாதபுரம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்த தீனுல் ஆசிப் என்பவரை கேணிக்கரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பேச்சாளர் எனக் கூறப்படுகிறது.

கோவை: பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் இருவர் கைது!

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தொடர்புடைய இடங்களில் நடந்த என்.ஐ.ஏ ரெய்டு, அதைத் தொடர்ந்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவை காரணமாக கோவை மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ள நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் கடந்த சில நாள்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 23-ம் தேதி குனியமுத்தூர் பகுதியில் தியாகு என்பவரின் வீட்டில் கார்மீது எரிப்பொருள் வீசப்பட்டது. அதேபோல பா.ஜ.க நிர்வாகி பரத் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்டது. இது குறித்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி கேமரா பதிவு ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

இந்தச் சம்பவம் தொடர்பாக, அறிவொளி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் (34) மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த இலியாஸ் (34) ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சி அடிப்படையிலும், தொழில் நுட்ப விசாரணை மூலம் இவர்களை குனியமுத்தூர் போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையும் தீவிரமடைந்துள்ளன. முக்கியமாக இரண்டு வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.