ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம் அசோக் கெலாட் வீட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடவில்லை.
சோனியா காந்தியின் முழு ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிட உள்ளார். இதில் அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
சச்சின் பைலட் புதிய முதல்வர்?
காங்கிரஸ் கட்சியில் தற்போது ஒருநபர் ஒரு பதவி என்ற நடைமுறை உள்ளதால் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் ராஜஸ்தானின் முதல்வர் பதவி ராகுலுக்கு மிகவும் நெருக்கமான சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதனை அசோக் கெலாட் விரும்பவில்லை. இருப்பினும் கட்சி மேலிடத்தின் ஆதரவால் எளிதாக சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு
இதற்கிடையே இன்று மாலையில் காங்கிரஸ் எம்எல்ஏ சாந்தி தரிவால் வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், ஆதரவு எம்எல்ஏக்கள் என 70 பேர் பங்கேற்றனர். இதில் 2020ல் 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை சுட்டிக்காட்டி அவருக்கு முதல்வர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
இந்நிலையில் இன்று இரவு 9 மணியளவில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம் துவங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதால் புதிய முதல்வரை தேர்வு செய்ய ஆலோசனை நடக்கிறது. இதில் சச்சின் பைலட்டின் பெயர் முன்னணியில் உள்ளது. இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்த முதல்வர் நியமிக்கப்பட உள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எவ்வளவு?
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் காங்கிரசுக்கு தாவிய 6 பேரும் அடங்குவர். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 12 பேர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். இதுதவிர பிற கட்சி எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். அதன்படி மொத்தம் 124 எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு உள்ளது. பாஜக கட்சிக்கு அங்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.