திருமலை:“திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுதும், 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன,” என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழு கூட்டம், அதன் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அவர் கூறியதாவது: பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பின், அதிகாலையில் அனுமதிக்கப்படும் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை, காலை 10 – 12 மணி வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவில் இருந்தே காத்திருக்கும் பக்தர்கள், அதிகாலையில் இருந்தே தரிசனம் செய்ய முடியும். அதேபோல்,
தினமும் 20 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டோக்கன் இல்லாமல், நேரடியாக திருமலைக்கு வந்தும் சர்வ தரிசனம் வாயிலாக சுவாமி தரிசனம் செய்யலாம். புரட்டாசி முடிந்த பின், தங்கும் அறைக்கான டிக்கெட் திருப்பதியிலேயே வழங்கப்படும்.ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நிலம், வீட்டுமனை போன்ற அசையா சொத்துகள் உள்ளன. சுவாமி பெயரில், மொத்தம் 960 அசையா சொத்துகள் உள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு, 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement