கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, பல்வேறு கோரிக்கைகளை பிசியோதெரபி சங்கத்தினர் முன்வைத்து இருக்கின்றனர். இதை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரின் மூலமாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
அதன் பின் அவரிடம் கோவையில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கோவையில் பாஜகவினர் எதற்காக கைது செய்யப்பட்டனர்? அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அதனால் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கோரிக்கைகள் இருந்தால் அதை மாவட்ட ஆட்சியர் அல்லது போலீஸ் அதிகாரிகளிடம் முன் வைத்திருக்கலாம்.
அதை விட்டுவிட்டு சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபடுவது, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பது என்று பதற்றமான விஷயங்களை செய்கின்றனர் .கோவையில் ஏதேதோ வன்முறைகள் நடப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. கோவையில் அப்படி எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.