திருப்பூர்: திருப்பூர் அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அதிமுக பிரமுகரை கடத்த முயற்சி செய்ததாக சென்னை காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). அதிமுகவில் திருப்பூர் ஒன்றிய பாசறை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி சங்கீதா. மாநகர் மாவட்ட இணை செயலாளர். இன்று மதியம் சந்திரசேகர் வீட்டில் இருந்தபோது, கார்த்திகேயன் என்பவர் வந்து காரில் காவல் ஆய்வாளர் காத்திருப்பதாகவும், தங்களை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்திரசேகர் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு முன் நின்ற போலீஸ் சீருடையில் ஒருவர் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் சென்றுள்ளது. வாருங்கள் பெருமாநல்லூர் காவல் நிலையத்துக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.
பெருமாநல்லூர் காவல் நிலையம் என்றால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கட்டுப்பட்டது தானே என்ற சந்தேகத்துடன் சந்திரசேகர் கேள்வி எழுப்ப, வலுக்கட்டாயமாக சந்திரசேகரை காருக்குள் கார்த்திகேயன் தள்ளி உள்ளார். அப்போது காருக்குள் ரத்தினராஜ் என்பவர் இருந்துள்ளார். இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட சந்திரசேகர், உடனடியாக கத்தினர். இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு திரண்டு, 4 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து பெருமாநல்லூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், காவல் ஆய்வாளர் சென்னை செங்கல்பட்டை சேர்ந்த அன்பழகன்(52) என்பதும், உடன் வந்தவர்கள் கணக்கம்பாளையத்தை சேர்ந்த ரத்தினராஜ் (33), மேகலா(34) மற்றும் கார்த்திகேயன் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சந்திரசேகருக்கும், ரத்தினராஜூக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் காரில் கடத்த முயன்றது தெரியவந்தது. அன்பழகன் சென்னை தலைமை செயலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் காவல் ஆய்வாளராக உள்ளார். ரத்தினராஜின் நண்பர் கார்த்திகேயன், அன்பழகனை திருப்பூர் அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.