வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பணஜி : கோவாவில், 14 வயதான மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவு அளிப்பதற்காக, கூலித் தொழிலாளியான தந்தை உருவாக்கியுள்ள ‘ரோபோ’ பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.கோவாவின் போண்டா தாலுகாவில் உள்ள பெதோரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிபின் கடம், 40. கூலித் தொழிலாளியான இவர், மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான மகளை, பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கை ஆனார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால், மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பின், மகளுக்கு உணவு அளிக்கக் கூட ஆளின்றி தவித்தார்.
இது, அவரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. மகளுக்கு நேரத்துக்கு உணவளிக்கும் ரோபோவை வாங்க திட்டமிட்டார். ஆனால், பிபின் எதிர்பார்த்த மாதிரியான ரோபோ சந்தையில் கிடைக்கவில்லை.அதுபோன்ற ஒரு ரோபோவை தானே உருவாக்க திட்டமிட்டார். தொழில்நுட்ப அறிவோ, அனுபவமோ இல்லாத பிபின், இணையதளங்கள் வாயிலாக, ரோபோ செய்யும் முறைகளை கற்றறிந்தார். நான்கு மாத ஆராய்ச்சிக்கு பின், இவரே சொந்தமாக ஒரு ரோபோவை உருவாக்கினார்.
அந்த ரோபோ முன், தட்டில் உணவு வைத்தால், குரல் உத்தரவுகளை பின்பற்றி, நாம் சொல்லும் உணவுகளை எடுத்து ஊட்டி விடுகிறது. இதற்கு, ‘அம்மா ரோபோ’ என, அவர் பெயரிட்டுள்ளார். பிபின் கூலி வேலைக்கு சென்றபின், அவரது மகளுக்கு ரோபோ தினமும் நேரத்துக்கு உணவு அளித்து வருகிறது.பிபின் கடமின் இந்த உருவாக்கத்தை, கோவா மாநில கண்டுபிடிப்பு கவுன்சில் வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த ரோபோவை மேலும் திறனுள்ளதாக மாற்ற தேவையான நிதி உதவி அளிப்பதுடன், வர்த்தக சந்தையில் விற்பனை செய்யவும் உதவுவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement