தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய தாம்பரம் எம்எல்ஏஎஸ்.ஆர்.ராஜாவுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, மிரட்டும்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து அவரது செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்கள் அச்சம்: திமுக ஆட்சியாளர்களின் அராஜகங்கள், அட்டூழியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது.
தாம்பரம் எம்எல்ஏ ராஜா மிரட்டும் காட்சி, தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டி ஊராட்சித் தலைவர் குருவம்மாளின் கணவர் காளிராஜ் புது வீடு கட்டுவோரை மிரட்டும் வீடியோ, மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் கமிஷன் கேட்கும் காட்சி போன்ற திமுகவினரின் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்ததால்தான் நமக்கு தெரியவருகிறது.
ஆனால், பொது வெளிக்கு வராமல் அன்றாடம் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திமுகவினரின் எண்ணிலடங்கா அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது.
தமிழகத்தை ஏதோ திமுகவினருக்கே பட்டயம் எழுதி கொடுத்ததைப்போல நினைத்துக்கொண்டு அவர்கள் செயல்படுவது கண்டனத்துக்குரியது.
திமுகவை ஆட்சியில் அமர வைத்ததைப் போன்ற தவறை இனி ஒருநாளும் மக்கள் செய்யமாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.