ஐதராபாத்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில்சூர்யகுமார், கோஹ்லி அரைசதம் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ரிஷாப் பன்ட் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் தேர்வானார். ஆஸ்திரேலிய அணியில் சீன் அபாட்டிற்கு பதிலாக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
கிரீன் விளாசல்: ஆஸ்திரேலிய அணிக்கு கேமிரான் கிரீன், கேப்டன் ஆரோன் பின்ச் ஜோடி துவக்கம் தந்தது. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கிரீன், அக்சர் படேல் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், பும்ரா வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 17 ரன் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது அக்சர் படேல் ‘சுழலில்’ பின்ச் (7) சிக்கினார்.
அக்சர் பந்தில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய கிரீன், 19 பந்தில் அரைசதம் எட்டினார். அபாரமாக ஆடிய இவர், 21 பந்தில் 52 ரன் (3 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (6) ‘ரன் அவுட்’ ஆனார். ஸ்டீவ் ஸ்மித் (9) சோபிக்கவில்லை. பின் இணைந்த ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட் ஜோடி நிதானமாக விளையாடியது.
டேவிட் அபாரம்: ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சகால் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் இங்லிஸ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேவிட், ஹர்சல் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது அக்சர் ‘சுழல் வலையில்’ இங்லிஸ் (24) சிக்கினார். மாத்யூ வேட் (1) ஏமாற்றினார். புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த டேவிட், ஹர்ஷல் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பி 25 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 54 ரன்னில் (4 சிக்சர், 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. சாம்ஸ் (28), கம்மின்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சூப்பர் சூர்யா: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (1), கேப்டன் ரோகித் (17) சுமாரான துவக்கம் தந்தனர். பின் இணைந்த கோஹ்லி, சூர்யகுமார்(செல்லமாக சூர்யா) ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் கோஹ்லி. மேக்ஸ்வெல் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சூர்யகுமார், டேனியல் சாம்ஸ், கம்மின்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஆடம் ஜாம்பா பந்தை சிக்சருக்கு அனுப்பிய சூர்யகுமார், அரைசதம் கடந்தார். இவர், 69 ரன்னில் அவுட்டானார்.
கோஹ்லி நம்பிக்கை: ஜாம்பா, கம்மின்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. சாம்ஸ் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோஹ்லி (63), அடுத்த பந்தில் அவுட்டானார். மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை ஹர்திக் பாண்ட்யா வீணடித்தார். ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹர்திக் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்திக் (25), கார்த்திக் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
21 வெற்றி
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, நடப்பு ஆண்டில் பங்கேற்ற 29 ‘டி-20’ போட்டிகளில் 21 வெற்றி, 7 தோல்வியை பெற்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதன்மூலம் சர்வதேச ‘டி-20’ அரங்கில், ஒரு சீசனில் அதிக வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் பாகிஸ்தானை (20 வெற்றி, 2021 சீசன்) முந்தி முதலிடம் பிடித்தது.
33 வெற்றி
ரோகித் தலைமையிலான இந்திய அணி, சர்வதேச ‘டி-20’ அரங்கில் 33வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் சர்வதேச ‘டி-20’ அரங்கில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில் கோஹ்லியை (32 வெற்றி) 2வது இடம் பிடித்தார் ரோகித். முதலிடத்தில் தோனி (42 வெற்றி) உள்ளார்.
8 விக்கெட்
இத்தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் அக்சர் படேல் முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில் 8 விக்கெட் சாய்த்தார். அடுத்த மூன்று இடங்களை தலா 3 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட் கைப்பற்றினர்.
118 ரன்
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கிரீன் முதலிடம் பிடித்தார். இவர், 3 போட்டியில் 2 அரைசதம் உட்பட 118 ரன் எடுத்தார். அடுத்த இரு இடங்களை முறையே இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (115 ரன்), ஹர்திக் பாண்ட்யா (105) கைப்பற்றினர்.
அடுத்து தென் ஆப்ரிக்கா
இந்திய அணி, அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் செப். 28ல் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் கவுகாத்தி (அக். 2), இந்துாரில் (அக். 4) நடக்கவுள்ளன.
அதன்பின் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கான போட்டிகள் லக்னோ (அக். 6), ராஞ்சி (அக். 9), டில்லியில் (அக். 11) நடக்கவுள்ளன.
19 பந்து
ஆஸ்திரேலியாவின் கிரீன், சர்வதேச ‘டி-20’ அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிகவேக அரைசதம் அடித்த வீரரானார். இவர், 19 பந்தில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன், 2016ல் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜான்சன் சார்லஸ் 20 பந்தில் அரைசதம் அடித்தது சாதனையாக இருந்தது.
* தவிர, அதிவேக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தை டேவிட் வார்னருடன் (19 பந்து, எதிர்: தென் ஆப்ரிக்கா, 2009) பகிர்ந்து கொண்டார் கிரீன். முதல் மூன்று இடங்களில் தலா 18 பந்தில் அரைசதம் எட்டிய வார்னர் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2010), மேக்ஸ்வெல் (2014ல் எதிர்: பாக்., மற்றும் 2016ல் எதிர்: இலங்கை) உள்ளனர்.
50 ரன்
பவுலிங்கில் ஏமாற்றிய இந்தியாவின் பும்ரா 4 ஓவரில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், 50 ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் சர்வதேச ‘டி-20’ அரங்கில் முதன்முறையாக ஒரு இன்னிங்சில் 50 ரன் வழங்கினார். இதற்கு முன், 2016ல் அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில், 2 விக்கெட் கைப்பற்றி, 47 ரன் வழங்கி இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்