கொல்கத்தா: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் 5 நாட்களாக நடத்தி வந்த ரயில் மறியல் போராட்டத்தை குர்மி மக்கள் கைவிட்டனர். தமிழகத்தை சேர்ந்த குருவிக்காரர்கள், குறவர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சில பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி பல ஆண்டுகளாக கோரி வரும் குர்மி இன மக்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இவர்கள் கடந்த 20ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். இதனால், ரயில் சேவை கடுமையாக பாதித்தது. ஜார்கண்ட், ஒடிசாவில் இப்போராட்டத்தை கைவிட்ட அவர்கள், மேற்கு வங்கத்தில் மட்டும் தொடர்ந்தனர். குஸ்தாார் – கெமசுலி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் முகாமிட்டு, இவர்கள் போராட்டம் நடத்தியதால் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று இவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதையடுத்து, இப்பாதையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கி உள்ளது.