வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் 77-வதுஆண்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேசியதாவது:
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சில் ஆகியவை சமகால உண்மைநிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், அந்த கவுன்சிலை மேலும் ஜனநாயகப்படுத்த முடியும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாகும்.
இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற முழுத் தகுதி உடையவை. எனவே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்படுவதற்கு ரஷ்யா தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதுமட்டுமின்றி, பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் நீண்டகாலமாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், ஆப்பிரிக்கர்களின் நலன்களைப் பிரதிபலிக்காமல், பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்கம் என்பது சாத்தியமில்லை. எனவே, இந்தக் கவுன்சிலில் ஆப்பிரிக்காவின் பிரதிநிதித்துவமும் கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும்.
கூடுதலாக பல மேற்கத்திய நாடுகளைப் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு கொண்டு வருவதால், நிச்சயமாக எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் அவை அனைத்தும் அமெரிக்காவின் உத்தரவுகளைப் பின்பற்றக்கூடியவை.
மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பாதுகாப்புக் கவுன்சிலில் அடுத்த ஆண்டு ஜப்பான் நிரந்தரமற்ற உறுப்பினராக சேர்க்கப்படுகிறது. இதையடுத்து மேற்கு குழுவின் பிரதிநிதித்துவம் 7-ஆக அதிகரிக்க உள்ளது. ஜப்பானைப் பொறுத்தவரை, அதன் கொள்கைக்கும், அமெரிக்காவின் கொள்கைக்கும் துளியும் வித்தியாசமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக 2021-ல் இந்தியா தேர்வு செய்யப்பட்டது. அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 10 நிரந்தரமில்லா உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கியது.
நிரந்தரமில்லா உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. பொதுச் சபையால் தேர்வு செய்யப்படுகின்றன.
பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளன. ஐ.நா.வில் கொண்டுவரும் எந்த தீர்மானத்தின் மீதும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் உரிமை, இந்த 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.