புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட்ஆஃப் இந்தியாவும் (பிஎஃப்ஐ), அது தொடர்பான நிறுவனங்களும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்துள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் (இடி) இணைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை அடுத்து, கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். அதேபோல், நாடு முழுவதிலும் அந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை அமலாக்கத் துறை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. மேலும், கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரிடம் 30-ம் தேதி வரை விசாரணை நடத்த என்ஐஏ-வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக, லக்னோவில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அளித்த விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாவது:
பிஎஃப்ஐ மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இது, அந்த அமைப்பின் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிஎஃப்ஐ ரூ.120 கோடி வரை வங்கிகளில் டெபாசிட்டாக வைத்துள்ளது. இதில் பெரும் பகுதி ரொக்கமாகவே உள்ளது. சதி நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து இந்த நிதியை திரட்டியுள்ளது.
டெல்லி கலவரம்
கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி கலவரங்களின் பின்புலத்தில் இந்த அமைப்புக்கு தொடர்புள்ளது. மேலும், பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உட்பட நான்கு கூட்டாளிகள் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக ஹத்ராஸுக்குச் சென்றபோது அவர்களை உ.பி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சித்திக் கப்பானுக்கும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்புள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், வகுப்புவாத கலவரங்களை தூண்டி, ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பல முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்தல் பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இறையாண்மையை குலைக்க சதி
தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில், பிரதமர் மோடியின் பாட்னா வருகையின் போது இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாத குழுக்களை உருவாக்க அந்த அமைப்பு திட்டமிட்டிருந்தது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.