ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பியூன் வேலைக்கு அரசு அறிவித்த தேர்வுக்கு, அதற்குப் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் வேலை வாய்ப்பின்மையை அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதிலும் கொரோனாவுக்கு பின்னர் புதிய வேலைகள் வெகுவாக குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர்.
சத்தீஸ்கரில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டும் வகையில் அரசு அலுவலகங்களில் உள்ள பியூன் வேலைகளுக்குப் பல பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் அரசு அங்குள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பியூன் வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கூறி தேர்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த வேலைக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தால் போதும். மேலும் பியூன் வேலை என்பதால் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் மற்றும் அடிப்படை எழுதும் திறன் தெரிந்து இருக்க வேண்டும். பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருந்த மொத்தம் 91 பியூன் வேலைகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

2.25 லட்சம் பேர்
இந்தத் தேர்வுக்காக சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க 657 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் தேர்வு எழுத 2.25 லட்சம் பேர் குவிந்தனர். அப்படி அங்குக் குவிந்தவர்களில் ஒருவர் தான் மனோஜ் குமார். அறிவியல் பட்டதாரியான இவர், ஒரு காலத்தில் துணை கலெக்டராக வேண்டும் என்ற ஆசைப்பட்டார். இருப்பினும், பல வருட வேலையின்மைக்குப் பிறகு, இப்போது பியூன் வேலைக்குத் தயாராகிவிட்டார்.

பட்டதாரிகள்
தான் இன்னும் கூட சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வருவதாகவும் இருப்பினும் பல ஆண்டுகளாக வேலையில்லாததால் இப்போது ஒரு பியூன் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இவர் மட்டுமின்றி, பல பட்டதாரிகளும் பியூன் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் கூட அவர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இப்போது பியூன் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

முனைவர்கள்
அங்குப் பலரும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திணறி வருகின்றனர். அதன் காரணமாகவே பியூன் வேலைக்கு அங்குள்ள பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து உள்ளனர். முனைவர் பட்டம் பெற்ற சிலரும் கூட இதற்கு விண்ணப்பித்தது தான் இதில் பெரும் சோகமாக உள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க அம்மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம்
உண்மை நிலை இப்படி இருக்க, அரசு கூறும் தரவுகளோ அதற்கு நேர்மாறாக உள்ளது. சத்தீஸ்கர் அரசு இணையதளத்தின்படி நாட்டிலேயே குறைந்த வேலையில்லா திண்டாட்டம் சத்தீஸ்கரில் தான் உள்ளது. அங்கு இப்போது 0.4% மட்டுமே வேலையில்லா திண்டாட்டம் உள்ளதாக அரசு கூறுகிறது. இது தேசிய அளவில் 8.3%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக அட்டாக்
மாநில அரசின் வேலைவாய்ப்பின்மை குறித்த தகவல்களை அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கடுமையாக விமர்சித்து உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் சத்தீஸ்கர் அரசு தோல்வி அடைந்துவிட்டதாகச் சாடியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, பிரதமர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதே இதற்குக் காரணம் என்று சாடியுள்ளது.