தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுத்தாக்கல் சென்னை அறிவாலயத்தில் விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க பலர் கடுமையாகப் போட்டியிட்டனர். குறிப்பாக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க நான்கு முனை போட்டி நிலவியது. ரேஸில் இருப்பவர்கள் தலைமையிடம் நெருக்கமாக இருக்கக்கூடிய தங்களுக்கு தெரிந்த நிர்வாகிகள் மூலம் முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க தலைமை ஒருவரை மட்டும் மனுத்தாக்கல் செய்ய வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாத்துரை மட்டும் தெற்கு செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் மேலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். “பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இதன் மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்ரமணியன் இருந்து வருகிறார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஏனாதி பாலசுப்ரமணியன், எம்.எல்.ஏ அண்ணாத்துரை, மாநில கலை இலக்கியப் பிரிவின் துணைச்செயலாளரான தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளரான பார்த்திபன், மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான இளங்கோவன் உள்ளிட்டவர்களிடையே கடுமையான போட்டி நிலவியது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமாருக்கு கிடைக்கப் போவதாக பரவலான பேச்சுக்கள் எழுந்தன. மொய் விருந்து நடத்தி வசூல் செய்த விவகாரம் உள்ளிட்டவற்றால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முயற்சி செய்யாமல் தானாகவே அதிலிருந்து விலகினார் அசோக்குமார்.
தற்போதைய பொறுப்பாளரான ஏனாதி பாலசுப்ரமணியன்மீது, கட்சி அலுவலகத்திலேயே மது அருந்தியது, கட்சி பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை உள்ளிட்ட பல புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றன. இதனால் அவருக்கான வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவ ஆரம்பித்தது.
தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் துபாய், சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு தொழில்களை செய்து வருபவர்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு போன்ற முக்கியஸ்தர்கள் வரும்போது அவர்கள் காரில் ஏரி செல்லக்கூடிய அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக வலம் வருகிறார். தஞ்சாவூரில் ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றை திறந்து வைக்க வந்த துரைமுருகனுக்கு தங்கச்சங்கிலி பரிசாகக் கொடுத்து அசரவைத்தார். `அடடே அழகா இருக்குய்யா..’னு சிரிச்சுக்கிட்டே சொன்ன துரைமுருகனிடம் வெளிநாட்டு தங்கம்ண்’ணே என்றாராம் செல்வம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக செல்வம் பல வழிகளில் முயன்றும் பலனில்லாமல் போனது. தற்போது மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தே தீர வேண்டும் என மெனக்கெட்டார்.
இதே போல் ஸ்டாலின்கிட்டேயே நேரடியாக அப்பாயிமென்ட் வாங்கி சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் பார்த்திபன். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் சமயத்திலேயே தன் சொந்தப் பணத்தில் ஆக்டீவாக கட்சி பணிகளை செய்தவர்.
கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வீடு தேடி கொடுத்ததற்காக தலைமை வரை பாராட்டப்பட்டவர். எம்.எல்.ஏ அண்ணாத்துரைக்கும், பார்த்திபனுக்கும் ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. இதனால் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபனுக்கு அந்த பதவி கிடைக்கக்கூடாது என அண்ணாத்துரை நேரடியாகவே காய் நகர்த்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்த்திபன் ஆதரவாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
இதனால் வடக்கு ஒன்றியச் செயலாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க மெனக்கெட்டு வருகிறார். இந்த நிலையில், தி.மு.க தலைமை மாவட்டச் செயலாளர் ரேஸில் இருந்தவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. ஏனாதி பாலசுப்ரமணியனிடம், `உங்க மேல பல புகார்கள் வந்து கொண்டே இருக்கு, ஆக்டிவா வேலை செய்ய முடியலை… பல வருடங்களுக்குப் பிறகு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுத்தோம். எங்க நம்பிக்கையை காப்பாற்றவில்லை, அதனால இப்ப நீங்க போட்டி போட வேண்டாம்’ எனக் கூறிவிட்டனராம்.
தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காது என்பதை அறிந்த பழஞ்சூர் செல்வம், அமைச்சர் நேரு மூலமாக தலைமை செயல்குழு உறுப்பினர் பதவியை கேட்டு வருவதாக தகவல். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரையிடம் நேரடியாகப் பேசிய தலைமை, `30 வருடங்களுக்குப் பிறகு சீட் கொடுத்து எம்.எல்.ஏ-வாக்கினோம். பதவிக்கு வந்த உடனே உங்க மேல புகார்கள் அணிவகுக்க தொடங்கி விட்டன. இனி அது மாதிரி புகார் எதுவும் வரக்கூடாது’னு கண்டிப்பு காட்டியதுடன், `நீங்க மனுத்தாக்கல் செய்யுங்க’னு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
ரேஸில் இருந்த மற்றவர்களுக்கு தலைமையிலிருந்து யாருக்கும் மனுத்தாக்கல் செய்யுங்கள் என உத்தரவு வரவில்லை. இதனால் அண்ணாத்துரைதான் அடுத்த மாவட்டச் செயலாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிருக்கிறது. பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்களிடம் மோதல் போக்கினை கடைபிடிப்பவர் அண்ணாத்துரை. எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் லோக்கல் நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.
பெரும்பான்மையான ஆதரவு இல்லாத அவரை எந்த விதத்தில் தலைமை மனுதாக்கல் செய்ய சொன்னது எனத் தெரியவில்லை என்ற எதிர்ப்பு குரல்களும் கேட்க தொடங்கியிருக்கின்றன” என்றார்கள்.
அண்ணாத்துரை மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில், பார்த்திபனும் மனுத்தாக்கல் செய்திருப்பது, தேர்தல் களத்தை மேலும் அனலாக்கி இருக்கிறது.