புதுடெல்லி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.47.54 கோடி செலவிட்டுள்ளது. ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக ரூ.17.75 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது.
கோவா சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களமிறங்கின. இந்த இரு கட்சிகளின் வரவால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்தத் தேர்தலில், மொத்தம் உள்ள 40-ல் 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வென்றது. எனினும், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த மாத தொடக்கத்தில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
இதனிடையே, தேர்தல் செலவு கணக்கை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தன. அதன் விவரம் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் ரூ.47.54 கோடி செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ ரூ.17.75 கோடி மட்டுமே செலவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.12 கோடியும், ஆம் ஆத்மி ரூ.3.5 கோடியும் பேரவைத் தேர்தலுக்காக செலவிட்டது தெரியவந்துள்ளது.
இதுபோல 11 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் தலா ரூ.25 லட்சமும், 10 தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா மொத்தம் ரூ.92 லட்சமும் செலவிட்டுள்ளன.