சென்னை: ஆயுத பூஜை – தசராவையொட்டி, தமிழகஅரசின் விரைவு போக்குவரத்து கழகத்தில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதபூஜையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 1-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் தினசரி இயக்கப்படுகின்ற 2100 பஸ்களுடன் 2050 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1650 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்
. அடுத்த வாரம் ஞாயிறு 2ந்தேதி காந்தி ஜெயந்தியைத் தொடர்ந்து, அக்டோபர் 4 மற்றும் 5-ந் தேதிகளில் விஜயதசதி, ஆயுத பூஜை மற்றும் தசரா விழாக்கள் கொண்டாடப்பட உள்ளது. இடையில் 3-ந் தேதி ஒருநாள் மட்டும் வேலைநாள். அன்றைய தினம் அரசு ஊழியர்கள் விடுப்பு போட்டால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் மேற்கொள்வோர் அதிகரித்து உள்ளனர்.
சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பை பாஸ் (பணிமனை அருகில்) இருந்து இயக்கப்பட உள்ளது. தினசரி வழக்கமாக செல்லக்கூடிய 2100 பஸ்களுக்கு முன்பதிவு முடிந்தவுடன் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரையில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். 30, 1-ந் தேதி மட்டுமின்றி, 2 மற்றும் 3-ந் தேதிக்கும் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.