காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள பாஜக அமைப்பு சாரா பிரிவின் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டுக்கு நேற்றிரவு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும். என்ஐஏ சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.
இந்த சோதனையின் எதிரொலியாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்வினை ஆற்றவில்லை. இதன் மூலம் பிஎஃப்ஐ அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸாரின் திறமை மதிக்கத்தக்கது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.