சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு படப்பிடிப்பில் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் வாரிசு
விஜய் ஹீரோவாக நடிக்க வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கி பிஸியாக நடைபெற்று வருகிறது.
விஜய் ரசிகர்கள் மீது தடியடி
எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளே அனுமதிக்காத பவுன்சர்கள், அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாகவும் தெரிகிறது. அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை, போலீஸாரை வைத்து விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீஸாருடன் கடும் வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள் வெளியாகும் போது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களைப் பார்த்து விஜய் கை கூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் குமுறி வருகின்றனர். அதில் சிலர் ரசிகர்மன்ற நிர்வாகியான தங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் எனவும் எச்சரித்துளனர். மேலும், ரஜினி, சூர்யா உட்பட மற்ற நடிகர்கள் இங்கு படப்பிடிப்புக்கு வந்தால் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதாகவும், விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளனர்.
ரசிகர்களுக்கு இது அவசியம் தானா?
விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாரிசு படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம், படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்பிற்காக ரசிகர்கள் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது. உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்போதெல்லாம் பாதுகாப்பு பணிகளுக்காக பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களையும் மீறி தேவையென்றால் போலீஸார் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் போது ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைக் கேட்டுவிட்டு ரசிகர்கள் அங்கு செல்வதும், இப்படி தடியடி நடப்பதும் தேவையில்லாதது என்றே சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.