போபால்: மத்தியப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேரில் அமர்ந்ததற்காக ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும், பட்டியலின மக்கள் மீதும் தலித் சமூகத்தினர் மீதும் ஆதிக்க சமூகத்தினர் என தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் தாக்குதல் நடத்துவது நீடித்து வருகிறது.
இது போன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கும் விதத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டிருந்தாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை.
மத்தியப் பிரதேசத்தில்
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூல் மாவட்டத்தில் உள்ள சௌக் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ‘கபில்தரா யோஜனா’ திட்டத்தின் பயனாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாற்காலியில் அமர்ந்ததற்காக
அதில், தலித் சமூகத்தை சேர்ந்த 35 வயதான ஹல்லு அஹிர்வார் எனும் இளைஞர் பங்கேற்றுள்ளார். கூட்டத்திற்கு வந்த ஹல்லு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ரோஹித் சிங் தாக்கூர் எனும் மற்றொரு இளைஞர் அங்கு வந்திருக்கிறார். ஹல்லு நாற்காலியில் அமர்ந்திருந்ததை கண்ட தாக்கூர், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் தாக்கூரை தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
மீண்டும் தாக்குதல்
பின்னர் தாக்கூரின் பெற்றோர்களிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து, அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஹல்லுவின் வீட்டுக்கு கூடுதலாக இரண்டு பேருடன் வந்த தாக்கூர், ஹாக்கி மட்டையால் ஹல்லுவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மண்டையில் ரத்தம் வழிந்தோட அக்கம் பக்கத்தினர் ஹல்லுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஹல்லுவுக்கு கை, கால்கள் உடைந்திருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துணை போகும் காவல்துறை?
விசாரணையில் வாக்குமூலம் அளித்த ஹல்லு, பஞ்சாயத்து அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த காரணத்தால் சாதி பெயர் சொல்லி இழிவாக பேசி தன்னை தாக்கூர் தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் காவல்துறை தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கிடையே இருந்த முன் பகை காரணமாக இந்த சண்டை நடந்துள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளனர். நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.