சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மாநில அரசு தரப்பில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்த சட்டப்பேரவை செயலாளர் சுரேந்தர் பால் கடந்த 22-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.
அதற்கு பதில் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் எந்த ஆளுநரும் இவ்வாறு செயல்படவில்லை. இனிமேல் சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்பதற்கும் ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டுமா” என்று கேள்வி எழுப்பினார். இந்த சூழலில் பேரவையின் சிறப்பு கூட்டத்தை நாளை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பாக அதிகாரபூர்வ ஆணையையும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஆளுநர், முதல்வர் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த 22-ம் தேதியே சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டோம். ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. கடும் எதிர்ப்பை பதிவை செய்த பிறகே செப்டம்பர் 27-ம் தேதி சிறப்பு கூட்டத்தை நடத்த ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணியாற்றும் ஆளுநர்கள் அரசியல் சாசன மரபுகளை மீறி செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தன.