புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது; பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ” பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும்,இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிய வேண்டி உள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.