பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டாலின் சொன்ன ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர்

தலைமையில் இன்று (26.9.2022) சென்னை, கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மற்றும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

“சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்படவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையிலே கடந்த ஆண்டு அதிக அளவிலே வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்காணித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக அவசியமானது. இதுமட்டுமின்றி சென்னையின் முதன்மையான நீராதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதாக நான் அறிகிறேன். ஆகவே பருவமழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும்.

மழைக் காலத்தின்போது நகர்ப்புறங்களில் மின்கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, கடும் போக்குவரத்து நெரிசலையும் அவை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க நீங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னதுபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும் (Monitoring Officers) மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி, பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.

இதில் குறிப்பாக பள்ளிக் கட்டடங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம். முக்கியக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். இதன் மூலமாக இம்முறை சென்னை நகரில் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று நான் ஓரளவுக்கு நம்பிக் கொண்டிருக்கிறேன், எதிர்பார்க்கின்றேன். அதே வேளையில், தேங்காது என்கிற நினைப்போடு நீங்களும் மெத்தனமாவும் இருந்து விடக் கூடாது.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித் தனியாக இயங்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த முறை வானிலை எச்சரிக்கைத் தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் நீங்கள் செய்ய வேண்டும்.

நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதில் குறைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை நாம் ஓரளவுக்கு குறைக்க முடியும். அதுதான் இந்த அரசினுடைய நோக்கம்.

உங்களுக்கு ஏற்படக்கூடிய எண்ணங்களை, உடனுக்குடன் அரசுக்கு நீங்கள் தெரிவித்து அந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும்தான் ஆலோசனை சொல்ல வேண்டும் என்பது இல்லை. உடனுக்குடன் நீங்கள் சொல்ல வேண்டும்.

பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். – மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.