அதிர்ச்சி…! ஆசையாய் ஆசையாய் போட்ட ஆர்டர் – 79 ஆயிரத்திற்கு பொம்மை கார் கொடுத்த பிளிப்கார்ட்

ஆன்லைன் ஷாப்பிங்கில்,  இந்தியாவில் முக்கியமாக இரண்டு தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்..  இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் தற்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளை வருகின்றன. அமேசானில், இந்த விற்பனை கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் தரப்படுகிறது. அதே நேரத்தில் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை என்னும் சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான் பொருட்களுக்கு தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்படுகின்றன.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சலுகை விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி இரவு 12 மணி முதல் தொடங்கியது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதல் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேஜெட்டுகள் வரை பலதரப்பட்ட தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வழக்கம் போல், பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது. அதாவது 22ஆம் தேதி முதலே, சலுகை விலைகளில், வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 

டெலிவரியில் குளறுபடி?

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் என்பவரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளார். ஏ.சி.மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு, ட்ரோன் கேமிரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார்.அப்போது, பிளிப்கார்டில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமிரா இருந்துள்ளது.

இதற்காக, தனது கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20ஆம் தேதியே ஆர்டர் செய்துள்ளார். ட்ரோன் கேமிராவின் பார்சல் இன்று டெலிவரி செய்யப்பட்டது. பார்சல் மிகவும் தட்டையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகியோர் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்துள்ளனர். அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் டெலிவரி பாயிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். 

Flipkart Car Delivery

மிகுந்த ஏமாற்றம்

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.பின்னர் இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர்.அவர்கள் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் கூறுகையில்,”தொழில் வளர்ச்சிக்காக ட்ரோன் கேமிரா வாங்க கடன் வாங்கியுள்ளோம். தற்போது இந்த ஏமாற்றம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது, பிளிப்கார்ட் நிறுவனங்களில் பெரும் தள்ளுபடி விற்பனைகள் நடைபெற்று வருவதால், ஆர்டர்களும், டெலிவரிகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பார்சலில் அனுப்பவதில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Flipkart Car Delivery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.