முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது புல்டோசர் நீரில் மூழ்கிய நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கால்வாய் பாலம் சேதமடைந்து இருந்ததால், புல்டோசர் மூலம் கட்டமைப்பின் மற்ற பகுதிகள் இடிக்கப்பட்டன. கங்கையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போது கங்கை நதியின் கால்வாயின் ஒருபக்கத்தில் இருந்து புல்டோசர் மூலம் பாலத்தின் மற்றொரு பகுதி இடித்து தகர்க்கப்பட்டது.
திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் புல்டோசர் தலைக்குப்புற கவிழ்ந்து புல்டோசரும் டிரைவரும் நீரில் மூழ்கினர். அதனை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை மீட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் ஆகிறது. மிகவும் சேதமான நிலையில் இருந்ததாலும், கால்வாயை அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பாலத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியின் போது புல்டோசர் வாகனம் தண்ணீரில் சிக்கியது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்’ என்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.