Rajiv Gandhi assassination case : நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில பதிலளிக்க உத்தரவு

Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கான தீர்மானம் 2014ஆம் ஆண்டு, பிப்.19ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேறியது. 

இந்த தீர்மானம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசு தரப்பில் இழுபறி நீடித்துவந்தது. தொடர்ந்து, எழுவர் விடுதலை குறித்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது,2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானமும் கிடப்பில் போடப்பட்டது. இந்த சூழலில், நன்னடத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அடுத்து, விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில், கடந்த மே 18ஆம் தேதி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

பேரறிவாளனின் விடுதலையை தொடர்ந்து, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அவர் உள்பட வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள 6 பேரையும்  விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான வகையில் மூன்று ஆண்டுகளாக ஆளுநர், தீர்மானத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து, பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முன்னதாக, இதே மனுவை இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு, நீதிபதிகள் பிஆர் கவாய், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த மனு குறித்து வரும் அக்.14ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. நளினி, ரவிச்சந்திரன் ஆகியோ் தற்போது பரோலில் இருப்பது நினைவுக்கூரத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.