ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – வழக்கு தொடர்ந்தார் திருமாவளவன்

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் இரண்டாம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முந்தைய கால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது ஆர்எஸ்எஸ்.

மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது, விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறத. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்  திட்டமிட்டுள்ளது.

தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை  வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும். எனவே ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என கோரியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணை விரைவில் விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.