மைசூரு: நவராத்திரி தொடங்கியதை அடுத்து கர்நாடகாவின் மைசூரில் தசரா திருவிழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கிவைத்தார்.
சக்தியை வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. கர்நாடகாவின் மைசூர் மாநகரில் நவராத்திரி விழா, தசரா திருவிழா என்ற பெயரில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கட்டுப்பாடுகளுடனே கொண்டாடப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் தசரா திருவிழா கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூருக்கு வருகை தந்து விழாவை தொடங்கிவைத்தார். குடியரசுத் தலைவரான பிறகு புதுடெல்லிக்கு வெளியே அவர் பங்கேற்கும் முதல் விழா இதுவாகும். இந்நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரந்லாஜே, மாநில அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, மைசூரு தசரா திருவிழா இந்திய கலாச்சாரத்தின் உயர்வையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தக்கூடியது என குறிப்பிட்டார். இரக்கமும் தியாகமும் கொண்ட தேவியான துர்க்கை, அநீதியை அழிக்கக்கூடியவள் என குறிப்பிட்ட திரவுபதி முர்மு, அப்படிப்பட்ட தேவியை நவதுர்க்கையாக வழிபடுவதே நவராத்திரியின் சிறப்பு என குறிப்பிட்டார். இது பெண்மையை கொண்டாடும் விழா என்றும் அவர் கூறினார்.
பக்தி, சமத்துவம், ஜனநாயகம், பெண் முன்னேற்றம் ஆகியவற்றுக்குப் பெயர்போன மாநிலம் கர்நாடகா என தெரிவித்த திரவுபதி முர்மு, அந்நியர்களுக்கு எதிராக கர்நாடகாவின் கிட்டூர் சென்னம்மாவும், அப்பக்கா மகாதேவியும் போர் புரிந்ததை சுட்டிக்காட்டினார்.
தசரா திருவிழாவை தொடக்கிவைப்பதற்கு முன்பாக, கர்நாடக மாநில தெய்வமாகக் கருதப்படும் சாமுண்டீஸ்வரி தேவி கோயிலுக்குச் சென்று திரவுபதி முர்மு வழிபாடு மேற்கொண்டார்.
தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரில் இந்த ஆண்டு 290 கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்களை கவரும் வகையில், உணவுத் திருவிழா, மலர் கண்காட்சி, குழந்தைகள் தசரா, இளைஞர்கள் தசரா, பெண்கள் தசரா, விவசாயிகள் தசரா ஆகியவையும் நடைபெற உள்ளன.