வடசென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தரப்பில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபர புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், சிறுமியை அவரின் உறவினர்கள் சிலர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், “பாதிக்கப்பட்ட சிறுமி, வடசென்னையில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அப்போது சிறுமி, பருவமடைந்த சில தினங்களில் அவரைப் பாலியல் தொழிலுக்கு அவரின் சித்தி தள்ளியிருக்கிறார். விவரம் தெரியாத சிறுமிக்கு இந்தக் கொடுமை நீண்ட காலமாக நடந்து வந்திருக்கிறது.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காணவில்லை என அவரின் அம்மா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரித்தபோதுதான் சிறுமி பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட விவரம் தெரியவந்தது. சிறுமியைப் பாலியல் தொழிலுக்குத் தள்ளிய அவரின் உறவினர்களை முதலில் கைதுசெய்தோம். அதன்பிறகு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை, வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையைச் சேர்ந்த தொழில் அதிபரான பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன் (44), சென்னை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த புகழேந்தி (45) உட்பட 22 பேரைக் கைதுசெய்தோம். இந்த வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சிறுமியின் வாக்குமூலம்தான் முக்கிய ஆதாரமாக இருந்தது. மேலும், கைதானவர்களின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் என 600 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் 16.2.2021-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் இரு பெண்கள் உட்பட மற்ற 4 பேர் தலைமறைவாக உள்ளனர். வழக்கில் கைதான 21 பேர் மீதும் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை” என்றனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 15-ம் தேதி நீதிபதி எம்.ராஜலட்சுமி சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், காமேஸ்ராவ் (33), முகமது அசாருதீன் (33), பசுலுதீன் (32), வினோபாஜி (39), கிரிதரன் (36), ராஜசுந்தரம் (62), நாகராஜ் (30), பொன்ராஜ் (35), வெங்கட்ராம் என்ற அஜய் (25), கண்ணன் (53) உட்பட 21 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் அவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தண்டனை விவரத்தை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 21 குற்றவாளிக்கான தண்டனை விவரத்தை நீதிபதி எம்.ராஜலட்சுமி இன்று தெரிவித்தார். அதன்படி, சிறுமியைப் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளிய 7 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளான பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளியான இன்ஸ்பெக்டருக்கு ஒரு 1,25,000 ரூபாயும், பா.ஜ.க பிரமுகருக்கு 50,000 ரூபாயும் உட்பட 21 குற்றவாளிகளுக்கும் சேர்த்து 7,01,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டு என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இது தவிர பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்திலிருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.