ஹாக்ஸ்டன் பூங்கா பகுதியில் கோர விபத்து மாணவன் சகரியா ரஹீம் உடல் நசுங்கி பலி
அதுவே குடும்பத்துடன் செலவிடும் கடைசி நிமிடங்கள் என தெரியாமல் போனது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நண்பருடன் காரில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
18வது பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் தமது மகன் பரிதாபமாக பலியானதாக அவரது தாயார் கண்கலங்கியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹாக்ஸ்டன் பூங்கா பகுதியில் குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 17 வயதேயான மாணவன் சகரியா ரஹீம் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
சனிக்கிழமை இரவு குடும்ப திருமண விழா ஒன்றில், தமது தாயார் மற்றும் சகோதரர்களுடன் புகைப்படங்களுக்கு முகம் காட்டி மகிழ்ந்தவருக்கு, அதுவே குடும்பத்துடன் செலவிடும் கடைசி நிமிடங்கள் என தெரியாமல் போனது.
நண்பரின் வாகனத்தில் சென்ற சகரியா ரஹீம், விபத்தில் சிக்கியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த இவர்களின் கார் தொலைபேசி கம்பத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
கடந்த புதன்கிழமை தான் தாயார் சொஃபினா கான் தமது மகனின் பட்டமளிப்பு விழா புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
சனிக்கிழமை, சகரியா மற்றும் சகோதரர்கள் உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தை சொஃபினா பகிர்ந்திருந்தார்.
விபத்தை ஏற்படுத்திய 17 வயது சாரதியும் சகரியாவின் நண்பருமான அந்த இளைஞரிடத்தில் தங்களுக்கு கோபம் ஏதும் இல்லை எனவும், தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர் மீண்டுவர வேண்டும் எனவும் சொஃபினா தெரிவித்துள்ளார்.
விபத்தை அடுத்து பரபரப்பான ஹாக்ஸ்டன் பூங்கா பகுதி மூடப்பட்டதுடன், விசாரணை முன்னெடுக்கும் அதிகாரிகள் சம்பவப்பகுதியில் காணப்பட்டனர்.